போலீஸ் ஜீப்பை திருடிய போலி அதிகாரி கைது

சேலம்:- சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தியிருந்த போலீஸ் ஜீப்பை திருடிய போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் ஜீப் திருட்டு சேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு தற்போது 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை தேர்வு பணி தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு நின்ற போலீஸ் ஜீப்பில் இருந்த மைக் செட்டை நைசாக கழற்றி கொண்டிருந்தார்.

இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணயைில், அவர் தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த மதன்குமார் (வயது 38) என்பதும், அவர் காரில் வந்து இருந்ததும், அந்த காரில் தமிழக அரசு முத்திரை ஒன்றும் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்துறை உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார். ஆனால் அவர் அரசு பணியில் எதிலும் இல்லை. ஆனால் அரசு அதிகாரி என்று கூறி வலம் வந்தது தெரிய வந்துள்ளது.

கைது இதற்கிடையே ஆயுதப்படை மைதானத்தில் இரவில் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் ஜீப் ஒன்று காணாதது குறித்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஜீப் காணாதது தொடர்பாக மதன்குமாரிடம் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீஸ் ஜீப்பை திருடியதும், அதை ஜங்சன் ரெயில் நிலைய பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று ஜீப்பை மீட்டனர். தொடர்ந்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பணம் மோசடி? இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மதன்குமார் நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படை மைதானத்துக்கு காரில் வந்துள்ளார். பின்னர் அவர் அந்த காரில் அமர்ந்து மது குடித்து விட்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் ஜீப்பை சாவி போடாமலேயே ஒயர் மூலம் இணைப்பு கொடுத்து ஸ்டார்ட் செய்து திருடி சென்று உள்ளார். அந்த வாகனத்தை ஜங்சன் பகுதியில் நிறுத்தி உள்ளார். நேற்று தனது காரை எடுப்பதற்காக மதன்குமார் அங்கு வந்தார். அப்போது தனது வாகனத்தில் பொருத்துவதற்காக அங்கிருந்த போலீஸ் ஜீப்பின் மைக் செட்டை திருடும் போது போலீசாரிடம் சிக்கி கொண்டார் என்றனர். மேலும் மதன்குமார் எதற்காக போலீஸ் ஜீப்பை திருடினார் என்பது குறித்தும், போலி அதிகாரி போல் நடித்து வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/State/fake-officer-arrested-for-stealing-police-jeep-896236?infinitescroll=1
https://www.dailythanthi.com/News/State/fake-officer-arrested-for-stealing-police-jeep-896236?infinitescroll=1
https://www.dailythanthi.com/News/State/fake-officer-arrested-for-stealing-police-jeep-896236?infinitescroll=1
https://www.dailythanthi.com/News/State/fake-officer-arrested-for-stealing-police-jeep-896236?infinitescroll=1