‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: ‘ப்ரீ பயர் கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:

கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்த எனது மகள் மாயமானார். உறவினர் வீடுகளில் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் புகார் செய்தோம்.மகளை தேட நடவடிக்கை எடுக்கவில்லை. மொபைல் போனில் இணையதள, ‘ப்ரீ பயர் கேம்’களை விளையாடும் பழக்கம் மகளுக்கு இருந்தது.

இதில் ஒரு ஆணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையானவர். எனது மகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார். போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. மகளை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. இதையடுத்து, மனுதாரர் மகள் ஆஜரானார்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்து:
கொரோனா ஊரடங்கு காலத்தின் போது, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அப்போது, மாணவர்கள் பலர் மொபைல் போன் மோகத்தில், ‘ஆன்லைன்’ விளையாட்டில் ஈடுபட்டனர்.

இளைய தலைமுறையினர் நடைமுறை வாழ்விலிருந்து விலகி, தனி உலகை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், அவை வெவ்வேறு பெயர்களில் இணையதளத்தில் ஊடுருவி வந்துவிடுகின்றன. முற்றிலும் நீக்கம் செய்ய இயலவில்லை.குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் மொபைல்போனில் மூழ்கியுள்ளனர்.

மனம் விட்டு பேசுவதில்லை. ப்ரீ பயர் கேமில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள், குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

Read More : Click More

Leave a Reply

Your email address will not be published.